எங்கே போகிறோம் நாம்? தொடர் -43-வாக்குமூலம்- தமிழருவி மணியன் ஜூனியர் விகடன் Issue date: 20.06.10

அன்புக்கினிய ஜூ.வி. வாசகர் களுக்கு... வணக்கம்.
'எங்கே போகிறோம் நாம்?' இந்த இதழுடன் நிறைவடைகிறது. ஒவ் வொரு மூலத்துக்கும் ஒரு முடிவு தவிர்க்க முடியாதது. இயற்கையின் படைப்பில் எல்லை இல்லாதது எதுவும் இல்லை. ஓட்டப் பந்தயத்தில்கூட, ஒரு முடிவு இருந்தால்தான் ஓடுபவனுக்கு அதில் ஓர் உற்சாகம் பிறக்கும்!
சமூக நலன் சார்ந்த உணர்வின் உந்துதலில் உருப்பெற்ற இந்தத் தொடர், பலரைப் பெரிதாகப் பாதித்தது. சிலரை, என் மீது எரிச்சலடையச் செய்தது. நெருப்பு மட்டுமா சுடும்? உண்மையும் சுடும்!
இழப்பையும் வலியையும் தாங்கிக் கொள்ளும் மனம் இருப்பவனால்தான்,உண்மைகளை உரத்த குரலில் சொல்லவும், அச்சமின்றி எழுதவும் முடியும். இந்தத் தொடர் முடியும் வரை காத்திருக்க முடியாத சில அவசரக்காரர்கள் 'நீ மட்டும் கட்சி மாறவில்லையா? காங்கிரஸ் குறித்து இப்போதுதான் ஞானம் வந்ததா? கலைஞர் கொடுத்த திட்டக் குழு உறுப்பினர் பதவியை நீ ஏற்றவன்தானே?' என்று விமர்சனக் கணைகளை வேகமாக வீசினார்கள். அவர்களுக்காகவே இந்த வாக்குமூலம்என்னால் இப்போது வழங்கப் படுகிறது.
நான் கட்சி மாறியவன்தான். ஆனால், கொள்கை மாறியவன் இல்லை. பதவிக்காகவும் பணத்துக்காகவும் என் ஆன்மாவை ஒருநாளும் அழுக்காக்கிக்கொண்டவன் இல்லை. ஒருநாள் காங்கிரஸிலும், மறுநாள் கலைஞரிடமும், அதற்கடுத்த நாள் போயஸ் தோட்டத்திலும், 'மூளை விபசாரி'யாக நான் போய் நின்றதில்லை. மாணவப் பருவத்தில் இருந்து இன்று வரை எனக்குப் பெரியாரைப் பிடிக்கும். இடதுசாரி இயக்கங்களைப் பிடிக்கும். ஆனால், ஒரு கடவுள் மறுப்பாளனாக இருக்க முடியாத என்னால், பெரியாரின் சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தில் இணைய முடியவில்லை.
வன்முறையின் நிழலைக்கூடத் தீண்ட விரும்பாத நான், கம்யூனிஸ்ட் ஆகவில்லை. இலக்கிய உலகில் பாரதியும், ஆன்மிகத் தளத்தில் விவேகானந்தரும், அரசியல் களத்தில் காந்தியும்தான் எனக்கு ஆதர்சமாக அமைந்தனர். இந்த மூவரிடமும்கூட எனக்குச் சில சிந்தனைகளில் கூர்மையான விமர்சனப் பார்வை உண்டு. எனக்கு எவரிடத்தும் கண்மூடித்தனமான 'தேவதா விசுவாசம்' என்றும் இருந்ததில்லை!

என் கல்லூரிப் பருவத்தில் காந்தியத் தைப் பழுதறக் கற்க முனைந்தேன். காந்தியின் சாயலில் தமிழ் மண்ணில் உலவிய காமராஜரின் காலடியில் போய் விழுந்தேன். காங்கிரஸ்காரனாக இருந்த நான், இந்திரா காந்திக்கு எதிராகப் பெருந்தலைவர் எழுந்தபோது, அவரோடு நான் ஸ்தாபன காங்கிரஸ்காரனாக மாறினேன். கையில் ஒரு பெட்டியுடன் மாநிலம் முழுவதும் நெருக்கடி நிலை காலத்தில் இந்திரா காந்தியின் அடக்குமுறையையும் குடும்ப அரசியலையும் மிக மூர்த்தண்யமாக எதிர்த்து நான்கு சுவர்களுக்கு நடுவே ஜனநாயகக் கடமையாற்றினேன். இந்திரா காந்தி கொண்டுவந்த 42-வது அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். நடத்திய கூட்டத்தில் பங்கேற்கப் பலர் அஞ்சியபோது, துணிவுடன் நான் அதற்குத் தலைமையேற்றேன். காமராஜ் மறைவுக்குப் பின்பு ஸ்தாபன காங்கிரஸ், ஜனதாவாகி, ஜனதா கட்சி சீரழிந்து, ஜனதா தளமாகி, ஜனதா தளம் சிதைந்து... காமராஜரின் லட்சியம் சார்ந்த தொண்டர்கள் வீதியில் நிற்க நேர்ந்தது. என் இளமை முழுவதும் இந்திரா காங்கிரஸ் எதிர்ப்பிலும், திராவிடக் கட்சிகளின் எதிர்ப்பிலும் கழிந்தது. அது குறித்து எனக்கு இன்று வரை கழிவிரக்கம் எதுவும் இல்லை.

நேர்மை சார்ந்த அரசியலுக்கு இனி தமிழகத்தில் இடம் இல்லை என்ற புரிதல் என்னுள் ஏற்பட்டதும், ஒழுங்காக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கைச் செலவுகளுக்கு வழி தேடிக்கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றத்தின் உள்ளே நுழைந்தேன். விதி என்னை விடுவதாக இல்லை. நான் பெரிதும் மதித்த ராமகிருஷ்ண ஹெக்டே தொடங்கிய 'லோக் சக்தி' இயக்கத்தின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்க நேர்ந்தது. ஓர் உயரிய லட்சியத்துக்காக அரசியல் களம் புகுந்து, ஜனதா தளத்தின் அழிவுக்குப் பின் அநாதைகளாகிவிட்ட காமராஜ் தொண்டர்களின் பாசறையாக லோக் சக்தி பரிணமித்தது. ஹெக்டே மத்திய அமைச்சராக அமர்வதற்கு பி.ஜே.பி-யுடன் கைகோத்து நின்றபோது, அந்த சந்தர்ப்பவாதத்தை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில்தான் மூப்பனார், நான் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று பெரிதும் விரும்பினார்.

ஒரு நாள் இரவு மூப்பனாரை அவரது வீட்டில் சந்தித்து நீண்ட நேரம் பேசினேன். 'தமிழ் மாநில காங்கிரஸில் நான் இணைய வேண்டும் என்றால், நீங்கள் எனக்கு இரு வரங்கள் தர வேண்டும்!' என்றேன். 'எந்த நிலையிலும் இந்திரா காங்கிரஸில் நீங்கள் இணையக் கூடாது. இரண்டு திராவிடக் கட்சிகளுடன் தேர்தல் உறவு தொடரக் கூடாது. இவையே நான் விரும்பும் வரங்கள்...' என்றேன். 'உங்கள் விருப்பப்படியே இரண்டும் நடக்கும்' என்றார் மூப்பனார். கால ஓட்டத்தில் இரு வரங்களும் பொய்த்துப்போயின. தமிழ் மாநில காங்கிரஸ், இந்திரா காங்கிரஸுடன் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. த.மா.கா-வின் பொதுச் செயலாளராக இருந்த நான், காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசியக் குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்றேன். வாசனும் நானும் நெஞ்சத்தளவில் நெருக்கமுற்றோம். வாசன் என் மீது பொழிந்த அன்புக்கு எல்லை இல்லை. ஒரு கட்டத்தில் வாசன் நான் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று மிகவும் வற்புறுத்தினார். 'ஒழுங்கீனமான இந்தக் கட்சிக்கு ஒருநாள்கூட என்னால் தலைவராக இருக்கவியலாது' என்று

மறுத்துவிட்டேன். இதை வாசனுடைய மனச்சான்று அறியும். என் பொருளாதார நிலை கண்டு, மூப்பனார் என் மகளின் திருமணச் செலவை மகிழ்ச்சியுடன் ஏற்க முன் வந்தார். 'நான் பெற்ற மகளுக்கு என் வியர்வையில் இருந்துதான் மணமுடிக்க வேண்டும்' என்று நான் மறுத்துவிட்டேன். வசதிமிக்க ஒரு வாடகை வீட்டை எனக்காகத் தேடிப் பிடித்து என் வாழ்க்கைச் செலவுகளை வாசன் ஏற்க விரும்பியபோது, அதை முற்றாக நிராகரித்தவன் நான். பல லட்சம் ரூபாயை ஒரு பையில் வைத்து அன்போடு வேறொரு அரசியல் நண்பர் அனுப்பிவைத்தபோது, அதைத் தொட மறுத்தவன் நான். எதன் பொருட்டும், எவர் பொருட்டும் என் கைகளில் இன்று வரை கறை படிந்ததில்லை!

கலைஞர் என்னை மாநிலத் திட்டக் குழு உறுப்பினராக நியமித்தார். நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது... பதவிப் பித்தினாலும் அதிகார வேட்கையாலும் அன்று. மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் நம் பங்களிப்பும் இருக்க அது ஒரு நல்வாய்ப்பு என்று கருதினேன். அங்கு ஊழலுக்கு இடம் இல்லை; சலுகை காட்ட வாய்ப்பு இல்லை என்பதனால் ஏற்றேன். என் பதவிக் காலத்தில் ஒரேயருமுறைகூட என் மேசை மீது இருந்த அரசுத் தொலைபேசியை நான் என் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தியது இல்லை. பணிக் காலத்தில் நான் காட்டிய ஈடுபாட்டையும், கடைப்பிடித்த நேர்மையையும் திட்டக் குழுவின் துணைத் தலைவர் அன்பிற் சிறந்த நாகநாதன் நன்கு அறிவார். நான் கலைஞரைச் சந்தித்தபோதெல்லாம் அவர் என் மீது பொழிந்த அன்பும் பாசமும் எளிதில் மறக்க முடியாதவை. காங்கிரஸில் இருக்கும் தலைவர்கள் அனைவரும் இன்றளவும் எனக்கு நல்ல நண்பர்களே. எவரிடத்தும் எனக்கு எந்த மூடப் பகைமையும் கிடையாது. ஆனால், ஈழத் தமிழர் இன்னலுற்றபோது, அவர்கள் துயர் துடைக்க முதல்வர் கலைஞர் முனைப்பாகச் செயலாற்றவில்லை. தமிழினத் தலைவராக அவர் எந்தத் தியாகத்துக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால் மனம் கசந்த நான் திட்டக் குழுவில் இருந்து விலகினேன். இனவுணர்வு இல்லாத காங்கிரஸ்காரர்களோடு இணக்கம் கொள்ள விரும்பாத நிலையில்... அங்கே இருந்தும் வெளியேறினேன்.

இறக்கும் நாள் வரை இனி என் வாழ்வில் கட்சி அரசியலுக்கு இடம் இல்லை. தன்னை அறிய புத்தனுக்கு எட்டு ஆண்டுகள் ஆயிற்று. என்னை அறிந்துகொள்ள எனக்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. என் இனத்துக்காகவும் மொழிக்காகவும் பாடுபட எத்தனையோ தலைவர்கள் புறப்பட்டுவிட்டார்கள். அவர்களது பயணம் தொடரட்டும். நான் தலைவன் இல்லை. என் தலைக்குப் பின்னால் எந்த ஒளி வட்டமும் இல்லை. விரிந்த சொத்து சேர்க்கும் விழைவு அறவே இல்லை. தமிழகத்தில் பல வீடுகள் சொந்தமாக உள்ள மனிதர்கள், நான் வசிக்கும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் சென்னை வந்தால் ஓய்வெடுப்பதற்காகப் பல்லாண்டுகளாகக் குறைந்த வாடகையில் தங்கியிருக்க தமிழக அரசு வசதி செய்து கொடுத்திருக்கிறது. ஒரு வீடும் இல்லாத எனக்கு வாடகைக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறும்படி அரசு 'நோட்டீஸ்' அனுப்புகிறது.

பொதுவாகவே நான் பார்க்கிறேன்... இன்றைய இளைஞர்களிடம் நம்பிக்கை வறட்சி நன்றாகத் தெரிகிறது. நம்பிக்கை வறண்டுபோனவர்களின் கைகளில் நாடு எப்படிப் பாதுகாப்பாக இருக்க முடியும்? நம்பிக்கைத் துடுப்புகளால் வாழ்க்கைப் படகை வழி நடத்தினால்தான், நாம் அடைய விரும்பும் கரை கண்ணுக்குத் தெரியும்.

பீகாரில் 1970-களில் இருந்த சீரழிவைப் போக்க இளைஞர்கள்தான் புறப்பட்டனர். 1957-ல் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் இருந்து விலகி 'இனி அரசியலே வேண்டாம்' என்று மனம் கசந்து, வினோபாவின் பூமி தான இயக்கத்திலும், காந்திய நிர்மாணத் திட்டங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணை, மாணவர்கள் 18 ஆண்டு அரசியல் துறவறத்தில் இருந்து விடுவித்து, ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை தாங்கச் செய்தனர். அதன் விளைவுதான் இந்தியாவில் நடந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டமும், இந்திரா காங்கிரஸின் வீழ்ச்சியும்.

பணமும், பதவியும், அதிகாரமும், மனிதனுக்கு உண்மையான இன்பத்தையும் அமைதியையும் தராது என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். அன்னிபெசன்ட் அம்மையார், தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் புத்தரின் மறு அவதாரம் என்று நம்பினார். தான் உருவாக்கிய உலக அமைப்பின் லட்சக்கணக்கான சீடர்களுக்குத் தலைமை ஏற்று, கோடிக்கணக்கில் குவிந்திருக்கும் சொத்துகளை ஜே.கே. பரிபாலிக்க வேண்டும் என்று அன்னிபெசன்ட் வற்புறுத்தினார். ஜே.கே. அதற்கு இணங்கவில்லை. 'நான் ஒரு அவதார புருஷன் இல்லை. யாரையும் குருவாக ஏற்காதீர்கள்' என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்த ஜே.கே., ஹாலந்தில் வழங்கப்பட்ட ஒரு பெரிய கோட்டையையும், 5,000 ஏக்கர் நிலப்பரப்பையும், உலகம் முழுவதும் அவர் காலடியில் கொட்டிய சொத்தையும் துச்சமெனத் தூக்கியெறிந்து, மனித குலத்தின் நல்வாழ்வுக்காக 90 வயது வரை தன் சிந்தனைகளை விதைத்தார்.

அந்த ஜே.கே-யை நான் படித்திருக்கிறேன். அரசியல் அதிகாரம் என்ற மேனகையிடம் மயங்காத மகாத்மாவை முடிந்தவரை பின்பற்ற முயல்கிறேன்.இரண்டாவது மகாத்மா ஜே.பி-யைப்போல், பகுத்தறிவுப் பகலவன் பெரியாரைப்போல், அதிகார அரசியலுக்கு அப்பால் நின்று மக்கள் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் என்னோடு காந்திய அரசியல் இயக்கத்தில் ஈடுபடலாம். நேர்மை தவறாமல், பதவிகளுக்குப் பல் இளிக்காமல், ஆள்பவர்க்குப் பல்லக்குத் தூக்காமல், பொதுச் சொத்தில் ஒரு செப்புக் காசுக்கும் ஆசைப்படாமல், மக்கள் நலத் திட்டங்களில் ஈடுபடுவதற்குப் பெயர்தான் 'காந்திய அரசியல்'.

கைம்மாறு கருதாமல் சமூக நலனுக்காக உழைக்க விரும்புவோர் என்னோடு கைகோத்து நடக்கலாம். இழப்புகளுக்கும் வலிகளுக்கும் யாரும் தயாராக இல்லையெனில், தாகூர் சொன்னபடி நான் தனியாக (walk alone) நடப்பேன். என் கையில் பேனா இருக்கிறது. என் வாக்கில் உண்மை இருக்கிறது. குறைந்த தேவைகளில் என்னால் நிறைவாக வாழ முடிகிறது. சமூகத் தீமைகளுக்கு எதிரான பயணம் என் இறுதி நாள் வரை தொடரும். 'மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க அவர்களே வழி தேட முனைய வேண்டும். அவர்களுக்கு உண்மை புரிந்துவிட்டால், தங்களுடைய வழியைத் தாமே கண்டுகொள்வார்கள். அவர்களுக்கு உண்மையைப் புரியவைப்பதுதான் நம் வேலை!' என்பது மாக்ஸிம் கார்க்கியின் மணிமொழி!
-நிறைந்தது.